ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை: முதல்வர் ஓபிஎஸ் உறுதி!
சென்னை: தமிழர்களின் பராம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு என்பது மஞ்சு விரட்டு, ஊர்மாடு, வடமாடு மற்றும் எருது விடும் விழா போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு இறுதியாக கடந்த 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சூழ்நிலையில், வரும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுவதற்கு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
7.5.2014 அன்று உச்ச நீதிமன்றத்தால், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பித்து ஆணை வழங்கப்பட்டு இது தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதால் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து 19.5.2014 அன்று தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இயத மறு ஆய்வு மனு இன்னமும் நிலுவையில் உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வழிவகை காணுமாறு புரட்சித் தலைவி அம்மாவின் உத்தரவிட்டதின் பேரில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, அது குறித்த பல்வேறு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் கடயத பல மாதங்களாக எடுத்து வருகின்றனர்.
மத்திய அரசினை தொடர்பு கொண்டு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையிலிருந்து காளையை நீக்கம் செய்ய தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெல்லியிலுள்ள தமிழக அரசின் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு, தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவினை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7.1.2015 அன்று தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து, மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அரசிதழில் ‘காளைகளை’ நீக்கும்படி வற்புறுத்தப்பட்டது. மத்திய அரசு அலுவலர்கள் துறை அமைச்சருடன் விவாதித்து அவ்வாறான அறிவிக்கையை வெளியிடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு ஏதுவாக 1960 ஆம் ஆண்டைய இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் பழக்கப்பட்ட விலங்கினை காட்சிப்படுத்துவது என்ற பிரிவிலிருந்து காளைகளை உடனடியாக நீக்கி அறிவிக்கை வெளியிடக் கோரி தமிழக அரசின் உயர் அதிகாரிகள் வரும் 12.1.2015 அன்று மீண்டும் டெல்லி சென்று மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து வற்புறுத்துவார்கள். இந்த அறிவிக்கையை மத்திய அரசு உடன் வெளியிடும் என நான் நம்புகிறேன். அவ்வாறான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு விட்டால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எந்தவித ஊறும் இல்லாத வகையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒரு புதிய அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட வழிவகை ஏற்படும். மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்ட உடனேயே, இதற்கான நடவடிக்கையை உடன் எடுத்து, தமிழர்களின் பராம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை உடன் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும்" என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment