Friday, 30 December 2016

ஜல்லிக்கட்டு கவிதை - ஜெயசீலன்

கத சொல்லவா. என் ஊரு கத சொல்லவா.
திமிலை சிலிச்சுகிட்டு திமிரா ஊருக்குள்ள நடந்த கருப்பன் - என் ஊரு சின்ன கோவில்மாட்டு கத சொல்லவா....!

நகை வச்சு கடன் வாங்கித்தான் பொங்கலுக்கு துணிமணி என்றாலும், கோவில்மாட்டுக்கு சரிகை வைச்சு துண்டு எடுப்பாரு
பழனி அய்யா....!

இந்த வருஷம் எந்த மஞ்சு விரட்டுக்கு டா மாட்டை கூட்டிபோறோம்னு வார்த்தைய கடக்காம மந்தையை விட்டு காத்து போனதில்லை....!

கொம்ப சொலட்டி ஒத்த பார்வை பாத்தான் பாரு,  ஒருபயலும் பக்கத்தல வரலேயே,  நடந்தே தான்யா எல்லகோட தாண்டினானு, அடுத்த மஞ்சு விரட்டு வரைக்கும் பேசுவாரு மீசைய முறுக்கிட்டே  முருகய்யா..!

உன்வயலுல மேஞ்சா எப்படிரா கோவில்மாட்ட அடிப்பனு சண்டைக்கு போன சண்டியரு சித்தப்பா...!

நம்ம மாடு எப்பிடிடா இருக்கு மறக்காம கேக்கும் சவுதில இருக்கற மச்சான்...!

எப்போயும் மந்தை தொட்டில தண்ணிவைங்க டா,  கருப்பன் தாகம் தாங்க மாட்டானு சொன்ன பிரசிடென்ட்ஐயா ...!

கருப்பணுக்கு முன்ன பெரிய கோவில்மாடு வயசாகி செத்தப்போ ஊரே கலங்கிபோய் ஒப்பாரி வைச்சு, கண்ணீரால பொதச்சு, கல்வைச்சு சாமியா கும்பிட்ட ஊரு...

செம்மண்ணை குத்திவீசியெறிஞ்சு முறைச்ச பார்வையா ஊருக்குள்ள திரிஞ்சாலும்,  ஒரூபயலும் மிருகமா பாத்ததில்லை.  பெத்த பிள்ளையா வச்சி பார்த்த ஊரூ

வெள்ளாமை இல்லாம ஆம்பள அம்பூட்டும் விவசாயம் விட்டு வெளியூரு பொழைக்க போச்சு.

மஞ்சு விரட்ட கவர்மென்டு தடைபண்ணின மூணாம்வருசம் , நிலமை சரியில்ல மாட்டை வித்துரலாமுனு முடிவுபண்ணுன அன்னைக்கு.,கிராமசபையில யாருக்கும் தொண்டதண்ணி இறங்கல...!

லாரில தடுப்புகட்டி மாட்ட  ஏத்துனப்போ ஒரு சத்தமும் போடாம, எல்லாம் புரிஞ்ச மாரி ஊர கடைசியா தீர்க்கமா பாத்துச்சு எங்க கருப்பன்

அன்னைக்கு நைட்டு தான் நானும் மெட்றாசுக்கு ரயிலெறினேன்

நானும் கருப்பனும் ஊர விட்டு போறோம் அடிமாடா..!

கண்ணீரோடு பதிவது - ஜெயசீலன்

No comments:

Post a Comment