Tuesday, 13 January 2015

ஜல்லிக்கட்டு நடத்த கடைசி நேர மல்லுக்கட்டு: சிக்கலை ஏற்படுத்தும் நிபந்தனைகள்

ஜல்லிக்கட்டு நடத்த கடைசி நேர மல்லுக்கட்டு: சிக்கலை ஏற்படுத்தும் நிபந்தனைகள்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது இன்று தெரியும். உச்ச நீதிமன்றத்தில், இதற்கான அனுமதியை பெற, தமிழக அரசு அதிகாரிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.

அரசாணை:


விலங்குகளை, காட்சிப்படுத்த தடை விதிக்கும் அரசாணையில், சிங்கம், புலி, கரடி, குரங்கு ஆகியவற்றோடு, காளைகளையும் சேர்த்து, மத்திய அரசு, 2011ல் ஒரு அரசாணை வெளியிட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு, ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு மே மாதம் தடை விதித்தது.நீதிமன்ற தடையை மறு ஆய்வுக்கு உட்படுத்த, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை, தனித்தனி மனுக்களை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.இந்நிலையில், விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில் இருந்து, காளையை நீக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, டில்லி சென்றுள்ள தமிழக அரசு அதிகாரிகள், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக செயலர் கெம்பாண்டேவுடன், நேற்று ஆலோசனை நடத்தினர்.'பட்டியலில் இருந்து, காளையை விடுவித்தால், சுப்ரீம்கோர்ட் உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்து, மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த முடியும்' என, தமிழக அரசு அதிகாரி கள் வலியுறுத்தி உள்ளனர். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம், ஜல்லிக்கட்டு பிரச்னை குறித்து கேட்ட போது, 'விரைவில், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, பதிலளித்தார்.

அவசரகால மனுவாக...:


இந்நிலையில், 'மறு சீராய்வு மனுவை, அவசர கால மனுவாக விசாரிக்க வேண்டும். விசாரணையை, நீதிபதியின் அறையில் நடத்தாமல், வெளிப்படையாக நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்' என, தமிழக அரசு, மற்றொரு மனுவை, உச்ச நீதிமன்றத்தில், நேற்று தாக்கல் செய்தது.இம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமியும், ஜல்லிக்கட்டு தடையை நீக்க, தனியாக ஒரு மனுவை, இன்று தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிக்கலை ஏற்படுத்தும்நிபந்தனைகள்:



உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்த, 30 நிபந்தனைகளை விதித்து, கடந்த முறை அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும், அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டே, ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் சிக்கல் ஏற்படும். 
*ஜல்லிக்கட்டுக்கு, 30 நாட்களுக்கு முன், பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும். 
*வங்கிகள் மூலம், பாதுகாப்புத் தொகையை, வரைவோலையாக அரசுக்கு செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை, இன்னும் இரு நாட்களில் நிறைவேற்றுவது கடினம்.எனவே, இந்த நிபந்தனைகளைத் தளர்த்தி, அனுமதி கிடைத்தால் மட்டுமே,ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment